Monday, April 15, 2013

கடல் கொண்ட தென்னாடு என்ற குமரி’க்கண்ட ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய தேவைகளும் புதிய கோணங்களும்


சிவ பாலசுப்ரமணி (கடல்ஆய்வு நிபுணர் கலிங்கா பாலு) அவர்களால் தென்மொழி இதழ் மார்ச்சு2012 இல் வெளிவந்த கட்டுரை

============================================
உலக அறிஞர்கள் கூறுகிற ‘இலெமூரியா’க் கண்டத்துடன் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல் கொள்ள அழிந்த நிலங்களை தொடர்புபடுத்தி, 1885இலேயே சி.டி.மெக்ளின், இலெமூரியா தென்னிந்தியாவாகிய தமிழ்நாட்டுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாகவே நீதிபதி நல்லசாமி அவர்கள் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் கடலில் மூழ்கிய பகுதிகளும் தான் இலெமூரியா என்று குறிப்பிடப்படுகிறது என்று 1898இல் உறுதிப்படுத்தினார்.

அவர் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்கக்கால உறுப்பினராவார்.

ஆங்கில அரசின் அறமன்ற நடுவராகப் பணியாற்றிய நல்லுசாமி அவர்கள், போப், மாக்சுமுல்லர் இவர்களுடன் நல்லதொடர்பில் இருந்தவர். போப் ஐயர், ‘என் கல்லறையின்மேல் ஒரு தமிழ் மாணவர் உறங்கிறார்’ என்று எழுதுங்கள் என்று எழுதியமடல் நல்லுசாமி அவர்களுக்கே. சைவ சித்தாந்தம், Divine Light என்று இருமொழிகளிலும் சிவனிய இதழ்களை நடத்தி வந்தார்.

மடகாசுக்கர், ஆசுத்திரேலியா, தென்னிந்தியாவாகிய தமிழ்நாடு ஆகிய நிலப்பரப்புத் தன்மைகளின் ஒற்றுமை, இவற்றில் படர்ந்திருக்கும் நிலத்திணைகள், வாழும் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின் ஒற்றுமைகளைக் காட்டி இப் பகுதிகளை இணைத்த ஒரு பெருநிலப்பரப்பு இருந்திருக்கவேண்டும் என்றும் அது பின்பு மூழ்கியிருக்க வேண்டும் என்ற கருதுகோள் உருவானது.

லெமூர் என்ற தேவாங்கு வாழும் மடகஸ்கார் மட்டும் அதன் படிமங்கள் கிடைத்த ஊட்டி மலைத்தொடர் மற்றும் புதிய பப்புவான் கினியா போன்ற இடங்களை ஒன்று இணைத்து மறைந்த ஆவி என்ற பொருளில் லெமுரிய என்ற பெயர் வந்தது

ஆனால் அண்மையில் நாட்டார் வழக்கியலில் லெமூர் என்கின்ற தேவாங்கை தமிழர் கடல் சார் பயணத்தில் மேற்கு திசையை காட்ட பயன் படுத்தினார் என்ற சொல்லும் நம்மை சிந்திக்க வைக்கிறேது

1912இல் செருமானிய அறிஞர் வெக்னர் உருவாக்கிய கண்டப் பெயர்ச்சிக்கோட்பாடு வந்தபின், இந்தியா என்ற நிலப்பரப்பே மடகாசுக்கர் பகுதியிலிருந்து பிரிந்து இப்போது ஆசியாவோடு இணைந்து மோதி இமயமலையை உருவாக்கியிருக்கிறது என்ற கருதுகோள் உருவானது.

இது நிகழ்ந்து பலகோடியாண்டுகள் ஆகிறபடியாலும் மாந்தன் தோன்றியது மிகவும் பிற்காலம் ஆனபடியாலும் கழக இலக்கியங்களின் காலம் அதனினும் மிகவும் பிற்காலமானதால் இதற்கும் தமிழிலக்கியங்களில் கூறப்படும் குமரிக்கண்ட கருத்திற்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.

லெமுரியா அல்லது குமரிக்கண்டம் , குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்று எழுதிய அப்பாத்துரையாரின் கருத்துப்படியும், கால்டுவெல் மொழிஆய்வின்படியும் அதன்வழி தேவநேயப்பாவாணரின் மொழி அகழ்வாய்வின்வழியும் உருவான குமரிக்கண்டக் கொள்கையும் மாந்தன் தோற்றம் பரவல் கொள்கையும்
தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் குமரிக்கண்டமும் கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் அடங்கியதல்ல.

எலனா பிளவாத்ஸ்கி ஆரம்பித்து வைத்த லெமுரியா தொடர்ச்சி சுப்பிரமணியன் சாஸ்திரி அவர்களால் வரைபடம் போட பட்டு நம்பகத்தன்மையை இழந்தது

மேற்கூறிய குமரிக்கண்டம் இருந்திருப்பதற்கான சான்றுகள் எவையும் நிலவியல் சான்றுகளுடன் நிறுவப்படவில்லை.

1959-1964 இல் நடந்த இந்திய மாகடல் கடலாய்வின்வழி கண்டறிந்த மூழ்கிய அல்லது மேல்தெரிகின்ற மலைத்தொடர்களும் தொடர்ச்சியான தீவுகளும் ஒரு நிலப்பரப்பு விட்டு விட்டு தீவுகளாய் இருந்திருப்பதற்கான சான்றுகளாக இருப்பதால் கடலில் ஒரு நிலப்பரப்பு மூழ்கியிருக்கலாம் என நம்பப்பட்டது.

இப்போது எங்களுடைய கடலாய்வு நேரடியாகக் கடலில் களஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இதுவரை கடல் கொண்ட தென்னாட்டின் ஆய்விற்கான எந்தக் கள ஆய்வும் எந்த அரசாலும் தொடர்ந்து மேற்கொள்ளப் படவில்லை.

குறைந்த அளவிலேயே ஆய்வுகள் மேற்கொள்ள பட்டன .

எனினும் எங்களுடைய சில ஆய்வுகளிலேயே பல செய்திகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

அந்த ஆய்வின்படி இதுவரை உலகில் அதிக மீன்வளம் மிக்கப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் ஆழம் குறைந்த கடல்பகுதிகளாகவே உள்ளன. அவற்றில் இந்தியப் பெருங்கடலில் ஆழம் குறைந்த பரப்புகள் கொண்ட பகுதிகள் ஆங்காங்கு நிறைய பகுதிகள் உள்ளன. குமரிக்கு நேர்கீழ் சற்றுத்தொலைவிலேயே 4500 சதுர மைல் கல் உள்ள பெரும்பரப்பு ஒரு சீரானதாக இல்லையெனினும் 140 மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.

அடுத்து மீன்வளம் நிறைந்த பகுதியாக உள்ள பகுதிகளின் புள்ளி விளக்கப்படி அவை மாந்தன் வாழ்ந்து மூழ்கிய இடிபாடுகள் நிறைந்த பகுதிகளாக உள்ளன. இவைதாம் மீன்கள் குஞ்சுபொரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் எனவும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற பகுதிகள் எனவும் ஆய்வுலகம் குறிப்பிடுகிறது.

குமரிக்கடலில் பெரும்பகுதி இவ்வாறு இடிபாடுகள் நிறைந்த தரைப்பகுதிகளாக இருப்பது நம் களஆய்வில் கண்டறியப்பட்டது. எனவேதான் அப்பகுதி மீன்வளத்தில் சிறந்த பகுதியாக உள்ளது என்பதும் தெரியவந்தது. 55 கி.மீ. தொலைவில் அதுபோன்ற தீவுகளும் ஆழங்குறைந்த திட்டுகளும் இருப்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது. இலக்கத்தீவுப் பகுதியிலிருந்து மடகாசுகர் பகுதிக்கு இடையில் தொடர்ச்சியான தீவுகள் ஏராளமாக இருப்பது தெரியவருகிறது.

மலையுச்சிகளும், கண்டங்களும் மடகாசுகர் பகுதியைச் சுற்றி ஏராளமாக உள்ளன.

அவை தென்னிந்தியாவை நோக்கி உள்ளன. நம் நாட்டில் உள்ள சக்கரைவள்ளிக்கிழங்கு கீழைத் தீவுகளில் பரவலாகக் காணப்படுகிறது. அவை ‘குமரா’ என்று அழைக்கப்படுகிறது.

அது தமிழ்ப் பெயர் என்றே கருதப்படுகிறது. அந்த வள்ளிக்கிழங்கு கடலில் மிதந்தோ, அடித்துக்கொண்டோ போய் அத் தீவுகளில் தானாகப் பயிர் தோன்றியிருக்க முடியாது. அவற்றை நட்டு வளர்த்துத்தான் பயிர் செய்திருக்க முடியும். எனவே இவை கடற்செலவால் மட்டுமே பரவலாகச் சென்று பயிர்செய்திருக்கக் கூடும்.

கடற்செலவில் வள்ளிக்கிழங்குக்குத் தனிச்சிறப்புகள் உண்டு. அந்நாளில் கடற்செலவு உணவுக்கு மிகவும் ஏற்றது. கடற்செலவின்போது 6 மாதத்திற்குக் கெடாமல் கப்பலில் வைத்துக் காத்துக் கொள்ளமுடியும். இது கீழைத் தீவுகளிலிருந்து பசுபிக்கு கடலில் தென்அமெரிக்கா வரையுள்ள தீவுகளில் நிரம்பக் காணப்படுகிறது. பாய்மரக்கப்பலுக்கு முன்பே பலவகையில் நீரோட்டத்தை நம்பிக் கடல் செலவு செய்துள்ளனர் என்பது நம் ஆய்வில் தெரியவருகிறது. அதற்குரிய மிதவை, தெப்பம், ஓடம், தோணி, படகு, கட்டுமரம் என்று பலபெயர்களில் செலவுப் பொருள்கள் இருந்துள்ளன. ஒரியா, பர்மா, கடாரம், அந்தமான் போன்ற கரையோர ஊர்களில் இப்பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதுடன் ஊர்ப்பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக வழங்குகின்றன.
உலகின் 8,50,000 கி.மீ. கடற்கரையில் 3,50,000 கி.மீ. கடற்கரை மாந்தனின் கையகத்தில் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் தமிழர்களின் பதிவுகள் இருப்பது தெரியவருகிறது.

இவை ஆமைகளின் வலசை இடங்களாக இருப்பதுதான் இதற்குக்காரணம். ஆமைகளின் போக்குகளையும், செங்கால்நாரையின் போக்குகளையும் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆமைகள் கடலின் நீரோட்டத்தின் துணைகொண்டே உலகை வலம் வந்தன. அந் நீரோட்டங்களை ஆமைவழியே தொடர்ந்து தமிழர்களும் நன்கு அறிந்திருந்தனர்.

தமிழர்களின் திருமணங்களில் ‘முளைப்பாரி’ கொண்டு போவது ஒரு சடங்காக இருக்கும். இது உழவுத் தொடர்பானது. தங்களுக்குப் பயிற்சி மிகுந்த பயிர்களை மணமகள் தான் வாழப்போகும் புதிய இடத்திற்குச் சீராகக் கொண்டு சென்று அங்குப் பயிர்செய்வது என்ற வழக்கத்தின் தொடர்ச்சியே இந்த ‘முளைப்பாரி’ திருமணச்சடங்கு. உலகின் கடற்கரையோர குடியேற்ற மக்களிடமும் இந்த வழக்கம் பரவலாக உள்ளது.

இது தமிழர்களின் பரவல் முறையைப் பின்பற்றியதாகும்.
பெரியஅளவில் எந்த அரசும் ஆர்வம் காண்பிக்காத நிலையிலேயே கடல் கொண்ட தென்னாடு தொடர்பான ஆய்வு இருந்தது.

இது தொடங்கினால் அது தமிழர்களின் பண்டை வாழ்வை தொல்வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக முடியும் என்பதாகவே இந்த ஆய்வு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்தது.

இலக்கியத்தில் உள்ள கடல்கோள்கள், கண்டம் மூழ்குதல் என்ற செய்திகளெல்லாம் சிறிது காலத்திற்குமுன்வரை மிகைப்படுத்தப்பட்டதாகவே கொள்ளப்பட்டது.

அவற்றில் உண்மை இல்லையென்றும் பழம்பெருமை பேசுவதாகும் என்றே புறந்தள்ளப்பட்டிருந்தது.

2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் இதுபற்றி ஆய்வுகள் மீண்டும் புத்தாக்கம் பெற்றன. ஆழிப்பேரலை, எரிதிரை என்றெல்லாம் பெயர் மீட்டெடுத்து அதன் ஆய்வின் தேவையை ஆய்வுலகம் எடுத்துக்கொண்டது. மீண்டும் ஆழிப்பேரலை தோன்றுமா அது எத்தன்மையில் தோன்றும். இந்தியப் பெருங்கடலின் தன்மை என்ன? அக்கடலின் அடிப்பரப்பு எவ்வாறுள்ளது. இதுவரை கடல்கோள்கள் நடந்த்தா?

கடல்பின் வாங்கியதா?

114 கிலோ மீட்டர் வரை பல வேறு காலத்தில் கடல் உள்நுழைந்துள்ளதன் வரலாறு என்ன?
அரியலூர், குடியம், மானாமதுரை, பனக்குடி போன்று நடுநாட்டிலும் கடல் வந்து போனதற்கான சான்றுகள் உள்ளனவா என்பவற்றைத் தெரிந்துகொள்வது அதன் ஆய்விற்கு வழிவகுத்தது.

குமரி கண்ட ஆய்வின் தேவை இவ்வாறாக விரிவுபெற்றுள்ளது.

உலக நாகரிகத்தில் தமிழர் பரவல் தமிழ்மொழிப் பரவல் இவ்வாறு பலதுறை ஆய்வுகளும் ஒருங்கிணைக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழகத்தின் 17 இலக்கம் ஆண்டுகட்குமுன் மாந்தன் நெருக்கமாக வாழ்ந்திருந்தது இன்று சாந்திபாப்பு போன்ற ஆய்வாளர்கள்வழி பழங்கற்கால ஆய்வுகள் உலகிற்கு எட்டியுள்ளது. உலகின் முகாமையான ஆய்விதழ்கள் அதை நுட்பமாக ஆராய்ந்து உறுதிசெய்து வெளியிடுகின்றன.

தென் கிழக்கு ஆசியாவில் அன்றைய மதராசில் பல்லாவரம் பகுதிகளிள் முதல் முதலாக கல்கோடாரிகள் எடுத்த சார் ராபர்ட் ப்ருசே பூட் மற்றும் கிங் அவர்களின் கடுமையான கள ஆய்வுகள் , உலக நாகரிகத்தில் நம்முடிய கற் கால மனிதர்கள் கூட்டமாக வாழ்ந்த பகுதிகளை அவர்கள் பயன படுத்திய கல் ஆயுதங்கள் இருந்த இடத்திற்கு மெட்ராஸ் கற் கால் மனிதர்களின் நாகரிகம் என்று பெயரிட்டது , பெரும்பானமையான் தமிழர்களுக்கு தெரியாது

நம் தொன்மையை முழுமையாய் வெளி படுத்த இன்னும் முறைப்படுத்தப்பட்ட கடல் ஆய்வுகள் முழமையாக தொடங்க வில்லை.

மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பழம் ஆய்வுகள், நிலத்திணை ஆய்வுகள் இன்று யாரும் தொடாமல் உள்ளது. ஒவ்வொரு நிலத்திணையையும் தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்தி வாழ்முறைக்குத் தக உருவாக்கியுள்ளார்கள் என்பதை உலகமே வியக்கிறது.

தென்னை, பனை, மா, பலா, முந்திரி ஆகியவற்றை இத்தனை வகையில் முழுவதுமாக பயன்படுத்த முடியுமா என்று வியக்கும் வகையில் இவர்கள் தங்கள் வாழ்முறையில் பயன்படுத்துகின்றனர்.
மீன்பிடிமக்கள், பாய்மரத்தைப் பயன்படுத்திய கடலோடி மக்களின் பலதொழில்நுட்பங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

பறவைச் சிறகுகளின் தொழில்நுட்பத்தைக் கண்டு அதையப்பக் கப்பல்களில் பாய்மரங்களை அமைத்தவர்கள் தமிழர்களே. பாய்மரத்துணியை பருத்தியிலிருந்து நெய்து புளியங்கொட்டையும் பிற மாவுகளையும் கலந்து உருவாக்கும் தொழில்நுட்பத்தை இன்றளவும் செய்துவரும் ‘வாதிரி’ என்றழைக்கப்படும் தமிழ்ப்பிரிவினர் இன்றும் வாழ்கிறார்கள்.

விசைப்படகுகள், நீராவிக்கப்பல்கள் வந்தபின் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிவியல் படுத்தப்படாமலேயே மறைந்துவிட்டன.

கீழைக்கடல் முழுவதும் கடல் மேலாண்மை செய்துள்ளதைத் தமிழ் மக்களே இன்றைக்கு நம்பவில்லை. கடாரம் கொண்டான் என்றால் அதுவெறும் பெருமை என்றே நம்ப மறுக்கிறார்கள்.
தமிழரின் மரபு விளையாட்டுகளான சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு, தாயம், பல்லாங்குழி போன்றவை உலக கடலோர ஊர்களில் இன்றும் நிலவுகின்றன.

உலகம் சுற்றிய தமிழக கடலோடி மீனவ மக்கள் இன்றைக்கும் கடற்கரைகளில் வாழ்ந்து வருகிறார்கள் .

அவர்களில் பலர் உலக எல்லைக் கடவு வைத்திருக்கிறார்கள். அவர்கள் வெறும் பாய்மரக்கப்பலில் அந்தமான், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, சீனா என்று வலம் வருவதைப் பெரியதாகக் கருதுவதேயில்லை. மிக எளிமையாக அதன் நுட்பங்களைத் தெரிந்து வைத்துள்ளனர்.

ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தென்னாப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு மடகாசுக்கர் வழியாகத்தான் முதலில் தென்னிந்தியாவை வந்தடைந்தனர்.

அவர்களுக்கு கட்டலான் என்ற பழங்குடிமக்களின் வரைபடம் துணையாக இருந்தது. ‘கட்டலான்’ என்ற இனமே கடலான் என்னும் தமிழ்ப்பெயர் கொண்ட தமிழ்சார் குடியேற்ற மக்களே என்பது அடுத்த ஆய்வு. தமிழ்நாட்டின் பழங்கல்வெட்டான மாங்குளம் கல்வெட்டில் ‘கடலன்வழுதி’ என்ற பாண்டிய மன்னனின் பெயர் இடம்பெற்றுள்ளது காணலாம்.
சுறாவேட்டை, முத்துக்குளித்தல், சங்குகுளித்தல், சிப்பியெடுத்தல் போன்ற தொழில்களின் மக்கள் இங்கு தமிழரிடை அழியா இனமாகத் தங்கள் அடையாளத் தொழிலிலேயே ஈடுபட்டுத் தனித்து வாழ்ந்துவருவதுபோல் பிலிப்பைன்சு, சீனா, சப்பான் நாடுகளின் கரையோரங்களில் பெரும்பான்மை மக்களின் தொடர்பில் இல்லாமல் இந்தத் தொழிலோடு வாழ்ந்து வருகின்றனர். ‘முத்து’ என்ற சொல்கூட அங்கு வழக்கில் உள்ளது.

தென்அமெரிக்கா முதல் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு இடைப்பட்ட கீழைநாடுகளின் மொழிகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என்று வில்லியம் மார்சுடன் (William Marsden) குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயர்கள் கடல் மட்டம் குறைந்த கடற்பரப்பிலேயே அதைத் தொடர்ந்து வந்தனர். மடகாசுக்கர்க்கும் தமிழகத்திற்கும் இடையில் ஆயிரக்கணக்கான தீவுகளும் கடல் ஆழம் குறைந்த திட்டுகளுமே இவர்களின் வருகைக்குத் துணைபுரிந்தது.

இவர்களில் வரவுகாலத்தில் கி.பி. 1350இல் கடலூழி தோன்றியிருந்ததால் கடல்மட்டம் சற்று
குறைந்து இருந்தது இவர்களின் வருகையின் போது அவர்களின் கவனத்தை ஈர்த்தது .

ஐரோப்பிய மக்களின் கடற்செலவு வரலாறு சென்னைப் பல்கலைக்கழக பழைய நூலகத்திலும் இலண்டன் நூலகத்திலும் 300க்கும் மேற்பட்ட நூல்களில் குறிப்புகளாகக் கிடைக்கின்றன.

எனவே கடல் கொண்ட தென்னாட்டின் மூழ்கிய நிலங்கள் தொடர்பான ஆய்வின் தேவைகள் புதிய கோணங்களில் தோன்றி பழைய வரலாறு என்ற நிலையிலிருந்து நிலப்பாதுகாப்பு என்ற வகையில் விரிந்துள்ளன.

அதன்வழி கடல் கொண்ட தென்னாடு வரலாறும் மூழ்காமல் மீட்டெடுக்க ஒருவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எங்கள் கள ஆய்வும் இவ்வழியில் வெற்றியுடன் எளிதே தொடர்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
============================================

3 comments:

  1. குமரிகண்ட வரலாறு மீட்க படும் போது நாககுடிகள் மற்றும் வேட்டுவகுடிகள் வரலாறு தான் வெளிவரும், பள்ளர் வரலாறு எப்படி வெளி வரும்.

    ReplyDelete
    Replies
    1. katturai nandraga padithu paar.... muthan muthalil kumari kandathil than thamilsangam niruvinargal achangathai nadathiyavar pandiyargal. pandiyargal endral pallargal. pallargale pandiyargal ena nirupikkapattuvittathu... குமரிகண்ட வரலாறு மீட்க படும் போது பள்ளர் வரலாறுதான் வெளிவரும். ithilena santhegam...

      Delete
  2. மிகவும் பயனுள்ள தகவலை தரும் சிறந்த பதிவு.

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி