Tuesday, September 17, 2013

பட்டமா,சாதியா? ஒரு அலசல்

வருடம்: 2013
--------------------
> டாக்டர்.கருணாநிதி
> டாக்டர்.ராமதாஸ்
> டாக்டர்.கிரிஷ்ணசாமி
> டாக்டர்.விஜய்

"இதில் யார் டாக்டர்? "
"எல்லாருமே டாக்டர் தான். "

"இதில் யார் பல்கலை கழகத்தில் இருந்து பட்டம் பெற்றவர்கள்?"
"எல்லாருமே தான்."

"இதில் யார் ஊசி போடுவார்கள்?"
"ராமதாஸ் அவர்களும், கிரிஷ்ணசாமி அவர்களும்."

ஆக, அவர்களின் தொழில்,பின்னணி,பூர்வீகம் போன்றவற்றின் அடிப்படையில் தான் ஒருவரை அணுக வேண்டும். மாறாக, டாக்டர் என்ற அடிப்படையில் அணுகினால் குழப்பம் தான் வரும். இல்லை என்றால் 'என் மகனை காப்பாத்துங்க என்று விஜய்யிடம் போய் நிற்க வேண்டி வரும்'.

வருடம் 2100:
-------------------
"டாக்டர் என்று பட்டம் வைத்து இருந்தவர்கள் (சும்மா பட்டம், MBBS பட்டம் என எல்லாமே) அனைவரையும் ஒருங்கிணைத்து,டாக்டர் என்ற சாதி உருவாக்கப்படுகிறது. இவர்கள் OBC பட்டியலில் வருவார்கள்" --- அரசு அறிவிப்பு.

வருடம் 2200:
--------------------
"டாக்டர் சாதி தான் ஆண்ட சாதி, மற்ற சாதி எல்லாம் அவர்களுக்கு பணி செய்த சாதி".


இது எத்தனை அபத்தம்? பட்டத்தை வைத்து மக்களை அணுகும் அங்குமுறை எத்தனை அபத்தமானது. இது தான் இன்றும் நடக்கிறது. எப்படி?

கவுண்டர் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'கவுண்டர்' சாதி.
படையாச்சி/வன்னியர் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'வன்னியர்' சாதி.
தேவர் என்ற பட்டம் எம்முடையது என்று சொல்பவர்கள் எல்லாம் 'தேவர்' சாதியினர்.
வேளாளர் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'வெள்ளாளர்' சாதி.
நாயக்கர் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'நாயக்கர்' சாதி.
அரையன் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'முத்தரையர்' சாதி.

பட்டத்தை வைத்து மக்களை அணுகும் அணுகுமுறை அபத்தமானது என்றால், அவர்களை SC / FC / பிசி என பிரித்து அடுக்கியது அதை விட அபத்தமானது. இதன் நோக்கம் ஒன்றே ஒன்று தான்.

"எந்த காரணத்தை கொண்டும், யாரும் யாருடனும் ஒன்று இணையக் கூடாது என்ற எதிரியின் சதி திட்டம் தான்".

இந்த காரணத்தினால் தான், தான் ஏன் FC / பிசி / SC பட்டியலில் இருக்கிறோம் என்று சம்பந்த பட்டவர்களுக்கே தெரியாத குழப்பம் நடக்கிறது. பட்டங்களை விட்டுவிட்டு, மக்களை எப்படி தான் ஆராய்வது?

* குறைந்த பட்சம் சம்பந்த பட்ட பட்டங்களை யார் யார் வைத்து இருந்தார்கள் என்றாவது ஆராய வேண்டும்.
* அந்த பட்டங்களை யார் யார் அவர்களுக்கு வழங்கினார்கள் என்றும் ஆராய வேண்டும்.
* அப்படி பட்டங்கள் உருவான காலம்,அதன் பின்னணி போன்றவை ஆராயப்பட வேண்டும்.
* பட்டங்கள் பெறுவதற்கு முன்பு, அதில் சம்பந்தப்பட்ட மக்கள் எவ்வாறு வழங்கப்பட்டனர்? அவர்கள் ஒருவரா இல்லை பலரா? பல்வேறு இனக்குழுக்களை சேர்ந்தவர்களா என்று பார்க்க வேண்டும்?
* எல்லாவருக்கும் மேலாக, பட்டங்களை பெரும் போதும், கொள்ளும் போதும், ஏதேனும் வன்முறைகள் நடந்தனவா என்றும், இன்று போல அன்று மக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கத் தான் பட்டங்கள் வழங்கப்பட்டனவா என்பதை கூர்ந்து ஆராய வேண்டும்.

அப்படி செய்வதன் மூலம், சாதி என்றால் என்ன, சாதியா பட்டமா, ஏன் பிரிந்தோம், ஏன் சேர்ந்தோம், ஏன் வகைப்படுத்தப்பட்டோம் என்ற ஒரு தெளிவு கிடைக்கும். இதன் மூலம், வரலாற்று ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் மக்கள், சேர்ந்து இயங்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்